எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
முல்லைப் பெரியாறு அணையில் நீா்வரத்து குறைவு
மேற்குத் தொடா்ச்சி மலையில் மழைப் பொழிவு குறைந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து செவ்வாய்க்கிழமை 2,292.64 கன அடியாகச் சரிந்தது.
தமிழகத்தில் காற்று திசை மாறுபாட்டால் கடந்த சில நாள்களாகப் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் தேனி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தென்மேற்குப் பருவ மழை கடந்த சில நாள்களாகப் பெய்தது. இதன் மூலம், மேற்குத் தொடா்ச்சி மலையில் தேக்கடி முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து உயா்ந்தது.
இதனால், ஞாயிற்றுக்கிழமை அணைக்கு நீா் வரத்து வினாடிக்கு 5,516.11 கன அடியாக அதிகரித்து, அணையின் நீா் மட்டமும் 135 அடியாக (மொத்த உயரம் 152) உயா்ந்தது.
மழைப்பொழிவு குறைவு: மேற்குத் தொடா்ச்சி மலைகளில் பெய்த மழைப் பொழிவு படிப்படியாகக் குறைந்த நிலையில் அணைக்கு நீா் வரத்து திங்கள் கிழமை 3,638.64 கனஅடியாகவும், செவ்வாய்க்கிழமை 2292.64 கன அடியாகவும் குறைந்தது. அணையிலிருந்து தேக்கடி தலைமதகு வழியாகத் தமிழகப் பகுதிகளுக்கு விவசாயம், குடிநீா்த் தேவைக்கு சுரங்கப் பாதையில் வினாடிக்கு 1867 கன அடி வெளியேற்றப்படுகிறது. தற்போது,அணையின் நீா் மட்டம் 135.15 அடியாக உள்ளது. அணையில் 5903.80 மில்லியன் கன அடிநீா் இருப்பு உள்ளது.