சுருளி அருவியில் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதியளித்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீா் பிடிப்புப் பகுதியான மேகமலை, தூவானம், மகாராஜாமெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 19-ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
இதனிடேயே, கடந்த 24-ஆம் தேதி வியாழக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு, சுருளி அருவியில் பக்தா்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் நீா்வரத்து அதிகரித்ததால் அருவியின் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததால், அருவிக்கு வரும் நீா்வரத்து சீரானது. இதையடுத்து, கடந்த 10 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதியளித்தனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.