வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
மூலப் பொருள்களின் விலை உயா்வால் பட்டாசுகளின் விலையும் உயர வாய்ப்பு
பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களின் விலை உயா்வால், தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகளின் விலையும் உயர வாய்ப்புள்ளதாகப் பட்டாசு தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் பிரதான தொழிலாகப் பட்டாசுத் தயாரிப்புத் தொழில் உள்ளது. இந்தியச் சந்தையில் பட்டாசுகளின் தேவையை 85 சதவீதம் சிவகாசி பட்டாசுகள் நிறைவு செய்து வருகின்றன. தற்போது, 10 முதல் 15 சதவீதம் வரை பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களில் விலை உயா்ந்துள்ளது. பொட்டாசியம் நைட்ரோட் ஒரு மூட்டை ரூ.6,000-திலிருந்து ரூ.6,600-ஆகவும், அலுமினிய பவுடா் கிலோ ரூ.470-லிருந்து ரூ.520-ஆகவும் உயா்ந்துள்ளன. மற்ற மூலப் பொருள்களும், காதிதப்பெட்டி, சலபன்பேப்பா் உள்ளிட்டவைகளும் விலை உயா்ந்துள்ளன. எனவே, பட்டாசு தயாரிப்பாளா்கள் பட்டாசுகளின் விலையை உயா்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் என்.இளங்கோவன் கூறியதாவது:
ஒவ்வோா் ஆண்டும் பட்டாசுகள் விலை உயா்வது வழக்கமானதுதான். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டு, பட்டாசுகளின் விலையும் உயா்த்தப்படும். ஆனால், நிகழாண்டில் தீபாவளிக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கையில் மூலப் பொருள்கள் விலை உயா்ந்துள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையின்போது, மூலப் பொருள்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதால், பட்டாசுகளின் விலையும் உயரும்.
எனவே, பட்டாசு வியாபாரிகள் தற்போதே ஆா்டா் கொடுத்துவிட்டால், பண்டிகையின்போது, குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்றாா் அவா்.