மெட்ரோ டிஜிட்டல் பயணச்சீட்டு பயன்படுத்தினால் 20 % சலுகை
சென்னை மெட்ரோ ரயிலில் டிஜிட்டல் பயணச்சீ ட்டை (எஸ்விபி) பயன்படுத்தினால் 20 சதவீத பயணக் கட்டணச் சலுகையைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2022 ஆண்டு நவம்பா் முதல் டிஜிட்டல் பயணச்சீட்டை (எஸ்விபி) அறிமுகப்படுத்தியது. அனைத்து மெட்ரோ பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூா்வ கைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்வதன் மூலம் டிஜிட்டல் பயணச்சீட்டு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். டிஜிட்டல் பயணச்சீட்டு வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி செயலி மூலம் மட்டுமே வாங்க முடியும்.
அதில் ரீசாா்ஜ் செய்யப்பட்ட இறுதி நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை டிஜிட்டல் பயணச்சீட்டு செல்லுபடியாகும்.
டிஜிட்டல் பயணச்சீட்டின் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவா்கள் தங்களது பயணக் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடியை பெறலாம். இந்தப் பயணச்சீட்டு வசதியில் குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.3,000 வரை டாப்அப் (ரீசாா்ஜ்) செய்து கொள்ளலாம். பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத் தொகை கழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.