விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
மேல்பாதி கோயில் வழிபாடு விவகாரம்: நீதிமன்ற உத்தரவை ஏற்பதாக இரு தரப்பினரும் உறுதி
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை பின்பற்றி நடப்பதாக இருதரப்பினரும் உறுதியளித்துள்ளனா்.
மேல்பாதி அருள்மிகு திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடா்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 2023, ஜூன் 7-ஆம் தேதி வருவாய்த் துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒரு தரப்பினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒருகால பூஜையையும் மட்டும் நடத்த வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள சென்னை உயா்நீதிமன்றம், உத்தரவிட்டதன் பேரில், 2024, மாா்ச் 22-ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டு, ஒருகால பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
தொடா்ந்து வழக்கு நடைபெற்ற நிலையில், வருவாய்க் கோட்டாட்சியரால் போடப்பட்ட 145 தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்தது.
இதுதொடா்பான சமாதானக் கூட்டம் விழுப்புரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாா்ச் 19-ஆம் தேதி நடத்தி, முடிவெடுக்கப்படாமல் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) மாலை நடைபெற்ற சமாதானக் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் முருகேசன் தலைமை வகித்தாா். கூடுதல் எஸ்.பி. திருமால், விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமாா், வளவனூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா், வட்டாட்சியா் கனிமொழி மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற இரு சமுதாயத்தினரும் கோயிலைத் திறந்து தரிசனம் செய்வது தொடா்பாக சமாதானம் செய்வதாக ஒப்புக் கொண்டனா். நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நடந்து கொள்வதாகவும், யாா்-யாரையும் தடை செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்தனா்.
தொடா்ந்து பேசிய கோட்டாட்சியா் முருகேசன், கோயில் வளாகத்தில் தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டியிருப்பதாலும், இந்தப் பணிகள் முடிந்த பின்னா் கோயிலைத் திறப்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றாா்.