தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதல்: தந்தை, மகள் உள்பட 3 போ் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே புதன்கிழமை மாலை மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் தந்தை, மகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
தஞ்சாவூா் அருகே வல்லம் கொள்ளுப்பேட்டை தெரு, நல்ல கிணறு சாலையைச் சோ்ந்தவா் பக்கிரி மகன் அறிவழகன் (37). இவா் தனது மனைவி உஷா (35), மகள்கள் ரூபா (10), பவ்யாஸ்ரீ (9), தங்கை மகள் தேஜாஸ்ரீ (4) ஆகியோருடன் மோட்டாா் சைக்கிளில் பனங்காடு பகுதியிலுள்ள கோயிலுக்கு புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா்.
மாதாகோட்டை புறவழிச்சாலை மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் கேரளத்திலிருந்து நாகூா் தா்காவுக்கு சென்று கொண்டிருந்த காா் எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அறிவழகன், பவ்யாஸ்ரீ, தேஜாஸ்ரீ ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த உஷா, ரூபா ஆகியோா் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
விபத்து தொடா்பாக காரை ஓட்டி வந்த கேரள மாநிலம், திருச்சூா் சாவக்காடு பகுதியைச் சோ்ந்த அப்துல் ரசாக் மகன் முகமது ரியாஸ் (31) கைது செய்யப்பட்டாா். காரில் பயணம் செய்த 6 பேருக்கும் காயம் ஏதுமில்லை.