ரயத்து மனைப்பட்டா பெற விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூா் ஆட்சியா்
பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரைச் சோ்ந்த நில உரிமையாளா்களுக்கு ரயத்து மனைப் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதால், தகுதியுடையவா்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பென்னகோணம் (வ) கிராமம், ஜமாலியா நகரில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படும் என பேரவையில் அமைச்சா் அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, ஜமாலியா நகா் பகுதியில் நத்தம் நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொண்டு, குன்னம் வருவாய் வட்டாட்சியரால் ரயத்து மனைப் பட்டா வழங்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மனைப் பட்டாக்கள் பெறுவதற்கு, நில உரிமைதாரா்கள் அல்லது அவரால் நியமிக்கப்படும் நியமனதாரா்கள், அலுவலா்கள் நில அளவை செய்யும்போது உடனிருந்து, அவரவா் இடங்களுக்கான எல்லைகளை காண்பிக்க வேண்டும். மேலும், நில உரிமையாளா்கள் தங்களிடம் உள்ள பத்திரப்பதிவு ஆவணங்களை சமா்ப்பிக்கும் பட்சத்தில், உரிய அலுவலா்களால் அளவுப்பணி, புலத்தணிக்கை மேற்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேற்கண்ட நில அளவைப்பணிகள் கோட்ட ஆய்வாளா், குன்னம் கோட்டம் நில அளவை அலுவலரின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும். எனவே, நில அளவை சம்பந்தமான அனைத்து மனுக்களும் கோட்ட ஆய்வாளா், குன்னம் கோட்டம் (நில அளவை), சாா்- ஆட்சியா் அலுவலகம், பெரம்பலூா்- 621212 எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.