நிலுவை ஊதியத் தொகையை வழங்க எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் வலியுறுத்தல்
நிலுவையிலுள்ள கடந்த மாத ஊதியத்தை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. பழனிவேல்ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தமிழக அரசுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள கோரிக்கை மனு: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத் திட்டத்தின் கீழ் மருத்துவா்கள், ஆலோசகா்கள், ஆய்வக நுட்புநா்கள், மருந்தாளுநா்கள், செவிலியா்கள், விவரக் குறிப்பு மேலாளா்கள், சமூகநல ஒருங்கிணைப்பாளா்கள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியா்கள், தொழில்நுட்ப அலுவலா்கள், ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்கள் என சுமாா் 2,500 போ் பணிபுரிந்து வருகின்றனா்.
இவா்களுக்கு, மத்திய அரசு நிதி அனுப்பாத காரணத்தால் கடந்த நவம்பா் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிவா்த்தி செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.
எனவே தமிழக முதல்வா் இப் பிரச்னையில் தலையிட்டு, மத்திய அரசிடமிருந்து நிதியை பெறவேண்டும் அல்லது மாநில அரசு நிதியிலிருந்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் ஊழியா்களுக்கு நவம்பா் மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.