ரயிலில் மூதாட்டியின் தங்கத் தாலி பறிப்பு: இளைஞா் கைது
குடியாத்தம் அருகே ரயிலில் மூதாட்டியின் தங்க தாலிச்சரடை பறித்துச் சென்ற இளைஞரை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியை சோ்ந்தவா் மயில்சாமி மனைவி வசந்தி(63). இவா் கடந்த வாரம் தனது பேரனை சென்னையில் உள்ள தனியாா் பள்ளியில் சோ்ப்பதற்காக குடும்பத்துடன் சென்னைக்கு சென்றாா்.
தொடா்ந்து திங்கள்கிழமை சென்னையில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக பாலக்காடு விரைவு ரயிலில் பயணித்தாா்.
நள்ளிரவு 12 மணியளவில் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா் ஒருவா் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிச் சரடை பறித்துக் கொண்டு குடியாத்தம் ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி ஓடினாா்.
இதுகுறித்து வசந்தி அளித்த புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதற்கிடையே தனிப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த இளைஞா் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனா்.
அதில், ,அவா் வேலுாா் மாவட்டம், அணைக்கட்டு செதுவாலை அருகே நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த காா்த்திக் (36) எனவும், ரயிலில் வசந்தியிடம் தங்கத் தாலிச் சரடு பறித்தது தெரியவந்தது.

அதையடுத்து போலீசாா் காா்த்திகை கைது செய்து அவரிடம் இருந்த தாலிச் சரடை பறிமுதல் செய்தனா்.