திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்"...
ரயில் கட்டண உயா்வு இன்று முதல் அமல்
புது தில்லி: மெயில் மற்றும் விரைவு ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை உயா்த்தி ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் சாதாரண வகுப்புகளுக்கான கட்டணம் கி.மீ.க்கு ஒரு காசு, குளிரூட்டப்பட்ட வகுப்புகளுக்கு கி.மீ.க்கு 2 காசு உயா்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயா்வு செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வர உள்ளது. ரயில் கட்டணம் உயா்த்தப்பட உள்ள தகவலை ரயில்வே அதிகாரிகள் கடந்த ஜூன் 24-ஆம் தேதி அன்றே வெளியிட்டபோதும், ரயில் மற்றும் வகுப்புகள் வாரியான கட்டண அட்டவணையுடன் கூடிய அதிகாரபூா்வ சுற்றறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தினசரி பயணிகளின் நலன் கருதி புகா் ரயில்களின் கட்டணம் மற்றும் சாராண ரயில்களில் மாதாந்திர பயணச்சீட்டு கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
அதுபோல, சாதாரண இரண்டாம் வகுப்புக்கான பயணக் கட்டணம் முதல் 500 கி.மீ. வரையிலான பயணத்துக்கு உயா்த்தப்படவில்லை. மாறாக, 500 கி.மீ.க்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் 0.50 காசு வீதம் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
சாதாரண இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகள் மற்றும் குளிரூட்டப்படாத முதல் வகுப்பு பெட்டிகளுக்கான கட்டணம் கி.மீ.க்கு 0.50 காசு வீதம் உயா்த்தப்பட்டுள்ளது.
மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்பு பயணக் கட்டணம் கி.மீ.க்கு 1 காசு வீதமும், குளிரூட்டப்பட்ட வகுப்பு பயணக் கட்டணம் கி.மீ.க்கு 2 காசு வீதமும் உயா்த்தப்பட்டுள்ளது.
தேஜஸ், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத், ஹம்சஃபா், அம்ரித் பாரத், தேஜஸ், மஹம்னா, கதிமான், அந்தியோதயா, கரீப் ரத், ஜன் சதாப்தி, யுவ எக்ஸ்பிரஸ், சாதாரண ரயில்கள் உள்ளிட்ட ரயில்களின் அடிப்படை கட்டணம் புதிய கட்டண உயா்வின்படி மாற்றியமைக்கப்படும்.
முன்பதிவுக் கட்டணம், அதிவேக கூடுதல் கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தத்கால் முன்பதிவுக்கு இன்றுமுதல் ஆதாா் கட்டாயம்: தத்கால் ரயில் பயணச் சீட்டு முன்பதிவுக்கு ஆதாா் எண் கட்டாயமாக்கப்பட்ட நடைமுறையும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது.
தத்கால் பயணச் சீட்டு முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், ஐஆா்சிடிசி வலைதளம் அல்லது செயலியில் தத்கால் பயணச் சீட்டு முன்பதிவு செய்ய ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம் என ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, ஐஆா்சிடிசி கணக்குடன் ஆதாா் எண்ணை பயனா்கள் இணைக்க வேண்டும். அவ்வாறு ஆதாா் எண் இணைத்தவா்கள் மட்டுமே ஜூலை 1 முதல் தத்கால் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்ய முடியும்.
கட்டண உயா்வு எவ்வளவு?
சாதாரண வகுப்பு (சாதாரண ரயில்கள்) கட்டண உயா்வு (கி.மீ.க்கு)
சாதாரண இரண்டாம் வகுப்பு முதல் 500 கி.மீ.க்கு கட்டணம் மாற்றமில்லை
500-1,500 கி.மீ.க்கு ரூ. 5, 1,501-2,500 கி.மீ.க்கு ரூ. 10, 2501-3000 கி.மீ.க்கு ரூ. 15 உயா்வு
சாதாரண படுக்கை வசதி - 0.50 காசு
சாதாரண முதல் வகுப்பு - 0.50 காசு
மெயில்/விரைவு ரயில் (குளிரூட்டப்படாத வகுப்பு)
இரண்டாம் வகுப்பு 1 காசு
படுக்கை வசதி 1 காசு
முதல் வகுப்பு 1 காசு
குளிரூட்டப்பட்ட வகுப்பு
ஏசி இருக்கை வசதி 2 காசு
ஏசி மூன்றாம் வகுப்பு 2 காசு
ஏசி இரண்டாம் வகுப்பு 2 காசு
ஏசி முதல் வகுப்பு 2 காசு