ரயில் நிலையங்களில் புரளிகளை நம்ப வேண்டாம்: பயணிகளுக்கு ரயில்வே அறிவுறுத்தல்
ரயில் பயணிகள் புரளிகளை நம்ப வேண்டாமென ரயில்வே நிர்வாகம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.
புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 18 பேர் சனிக்கிழமை இரவு பலியாகினர். இந்த அசம்பாவிதம் நாடெங்கிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
ரயில்வே அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பயணிகள் யாரும் செவி வழி தகவல்களை உண்மையென நம்பி நடைமேடை விட்டு நடைமேடைக்கு அவசரகதியில் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரயில்வே தரப்பில் வரும் தகவல்களை கவனமாகக் கேட்டு நடந்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகளின் ஒத்துழைப்பை ரயில்வே முழு அளவில் எதிர்பார்க்கிறது. இதன்மூலம், மண்டல ரயில்வே அதிகாரிகளால் திட்டமிட்டபடி ரயில் சேவைகளை இயக்க உதவியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதற்கு, புரளிகளை நம்பி அவர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏற முற்பட்டதே முக்கிய காரணமென கூறப்படும் நிலையில், ரயில்வே துறை மேற்கண்ட அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளது.