கருப்பு டீசர்: 'என் பேரு சரவணன்; எனக்கு இன்னொரு பேரு இருக்கு' - RJB-யின் ஃபேன் ப...
ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞரைக் கைது செய்த ரயில்வே போலீஸாா், அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கே.பி.செபாஸ்டியன் தலைமையில் உதவி துணை ஆய்வாளா்கள் அன்புச்செல்வம், முஹமதுஅஸ்லாம் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ரயில் நிலைய 7-ஆவது நடைமேடைப் பகுதியில் டிராலி பேக்குடன் வடமாநில இளைஞா் நின்று கொண்டிருந்தாா். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீஸாா் அவரை விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளாா். இதையடுத்து அவரிடமிருந்த பேக்கை சோதனையிட்டதில், 10 பண்டல்களாக உலா்ந்த பழுப்பு மற்றும் பச்சை நிற இலைகள் இருந்தன. அவை 20 கிலோ எடையுள்ள கஞ்சா இலைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அவா் திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த சாஹின்மியா (28) என்பதும், ஹௌராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா இலைகளை பேக்கில் பொட்டலங்களாக அடைத்து சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா இலைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் எனக் கூறப்படுகிறது.