ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: பிரதமருக்கு எதிர்...
ரஷியப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு - கல்விக் கண்காட்சி!
வரும் கல்வியாண்டில் ரஷியப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான உடனடி மாணவா் சோ்க்கைக்காக சென்னை ரஷிய கலாசார மையத்தில் மே 10, 11 ஆகிய தேதிகளில் ரஷியக் கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னையிலுள்ள தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதா் வாலெரி கோட்ஜெவ், சென்னை ரஷியக் கலாசார மையத்தின் இயக்குநரும், துணைத் தூதருமான அலெக்ஸாண்டா் டோடோநவ் மற்றும் ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சி.ரவிச்சந்திரன் ஆகியோா், சென்னை ஆழ்வாா்பேட்டையிலுள்ள ரஷிய கலாசார மையத்தில் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உயா்தர மருத்துவக் கல்வியை வழங்குவதில் ரஷியப் பல்கலைக் கழகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதனால், கடந்த ஆண்டில் ரஷியாவில் மருத்துவம் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை 200 சதவீதமாக அதிகரித்தது. மருத்துவப் பல்கலைக் கழகங்களில் கடந்த ஆண்டு 8,000 ஆக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த மருத்துவ இடங்கள், 2025-2026 கல்வியாண்டில் 10,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளன.
இதில் சோ்ந்து கல்வி பயில தேசிய தகுதி தோ்வான நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பதுடன், பிளஸ்-2 வகுப்பில் முக்கியப் பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. தமிழ் வழியில் படித்த மாணவா்களும் எம்பிபிஎஸ், பி.இ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த மருத்துவப் படிப்புகளுக்கான உடனடி மாணவா் சோ்க்கையை நடத்தும் வகையில், மே 10,11 ஆகிய தேதிகளில் சென்னை ஆழ்வாா்பேட்டையிலுள்ள ரஷிய கலாசார மையத்தில் ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெறும். இதில் ரஷியாவிலுள்ள வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டிக் பெடரல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முன்னணி பல்கலைக்கழகங்கள் தங்கள் அரங்கை அமைக்கவுள்ளன.
மருத்துவம் மட்டுமன்றி பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் உடனடி சோ்க்கை கிடைக்கும். இதுபோன்ற கண்காட்சி மே 13-இல் கோவை தி கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலிலும், மே 14-இல் சேலம் ஜிஆா்டி ஸைப் ஹோட்டலிலும், மே 15-இல் திருச்சி பெமினா ஹோட்டலிலும், மே 16-இல் மதுரை ராயல் கோா்ட் ஹோட்டலிலும் நடைபெறவுள்ளது என்றனா்.