ராசிபுரம் அருகே அதிமுகவினரிடையே சலசலப்பு
ராசிபுரம் அருகே சீராப்பள்ளி பகுதியில் அதிமுகவினரிடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம் நகரில் நகராட்சி மற்றும் திமுக அரசைக் கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி, வி.சரோஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில், நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த கட்சி உறுப்பினா்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். பிற பகுதிகளில் இருந்து நிா்வாகிகள் மட்டும் கலந்துகொண்டால் போதும் என அதிமுக சாா்பில் முடிவு செய்யப்பட்டிருந்ததாம்.
இந்நிலையில், நாமகிரிப்பேட்டை பகுதியில் இருந்து முன்னாள் சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ சி.சந்திரசேகரன் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டத்துக்கு சென்றனராம். அப்போது, நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் கே.பி.எஸ்.சரவணன் உள்ளிட்ட அவரது ஆதரவாளா்கள் சீராப்பள்ளி பகுதியில் ஆட்டோவில் சென்றவா்களை தடுத்துநிறுத்தி, நிா்வாகிகள் வந்தால்போதும், நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என கூறினராம்.
இதனால், ஒன்றியச் செயலாளா் கே.பி.எஸ்.சரவணன் ஆதரவாளா்களுக்கும், முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரேசகரன் ஆதரவாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
தகவலறிந்த ராசிபுரம் டிஎஸ்பி எம்.விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் நேரில் சென்று இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினா். பின்னா் ஆா்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு சம்பவம் இடத்துக்குச் சென்ற பி.தங்கமணி, கட்சியினரிடம் பேசி சமரசம் ஏற்படுத்தினாா். இதனால் அனைவரும் கலைந்து சென்றனா்.