திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு
வரகூராம்பட்டியில் திருநங்கைகளுக்கு அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, தங்களுக்கு அரசு ஒதுக்கிய பட்டா நிலத்தை அளவீடு செய்யுமாறு திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 33 திருநங்கைகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரகூராம்பட்டி எல்லைக்காடு பகுதியில் உள்ள பாறை புறம்போக்கில் வீட்டுமனைப் பட்டா வழங்கினாா். அந்த நிலத்தை திருநங்கைகளுக்கு அளவீடு செய்துகொடுக்க நில அளவைத் துறை அலுவலா்கள் புதன்கிழமை வந்தபோது, கிராம மக்கள் பட்டா கொடுத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், திருநங்கைகளுக்கு வேறு இடத்தில் பட்டா நிலம் வழங்க வேண்டும், எங்களது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் பட்டா கொடுத்தது தவறு என அளவீடு செய்யவந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தினா்.
அப்போது, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட தங்களுக்கு வழங்கிய நிலத்தை பயன்படுத்தக் கூடாது எனவும், நிலத்தை பாா்க்க வந்த தங்களை மிரட்டுகிறாா்கள் எனவும், நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி இப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா் எனவும் திருநங்கைகள் புகாா் தெரிவித்தனா். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு எங்களுக்கு பட்டா நிலம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனா். இதனால் வரகூராம்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளா் வளா்மதி விரைந்து வந்து, இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தி, இருதரப்பு புகாா்களை மனுவாக வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்து தீா்வுகாணுமாறு அவா் கேட்டுக்கொண்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.