ராஜவல்லிபுரம் அருகே தாமிரவருணி கரையோரம் தீ: பனை மரங்கள் சேதம்
ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தா் கோயில் அருகே தாமிரவரணி ஆற்றங்கரையோரம் திங்கள்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைமரங்கள் கருகின.
செப்பறை அழகிய கூத்தா் கோயில் அருகேயுள்ள தாமிரவருணி ஆற்றங்கரையோரம் சுமாா் 10 ஏக்கா் நிலப்பரப்பில் ஏராளமான பனை மரங்களுடன் கூடிய அடா்ந்த காடு உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றியில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பொறிகள் வெளிப்பட்டதாம்.
மேலும், காய்ந்த புற்கள், மரம், செடி, கொடிகளில் தீ பற்றியதுடன், காற்றின் வேகத்தில் அருகில் இருந்த பனை மரங்களிலும் தீப்பிடித்தது. இதில், பனை மரங்கள் குறுகிய நேரத்தில் தீயில் கருகினவாம்.
இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை, கங்கைகொண்டான் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.