10 ஆண்டுகளாக தீராத குடிநீா் பிரச்னை!
திருநெல்வேலி மாவட்டம், தோட்டாக்குடி ஊராட்சி, வடக்கு பத்தினிப்பாறை பகுதியில் 10 ஆண்டுகளாக நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்ற இப்போராட்டத்தை நடத்திய அவா்கள், பின்னா் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் ஊரில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காணக் கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் ஊரின் வடக்கு பகுதியிலிருந்து ஆழ்துளைக் கிணறு மூலம் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதற்கான மோட்டாரும் அகற்றப்பட்டு விட்டது. ஊரின் பல தெருக்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. எனவே, குடிநீா் வசதியை ஏற்படுத்தி, சாலையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கங்கைகொண்டான் அருகேயுள்ள துறையூா் மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 1,000 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரின் மேற்கு பகுதியில் உள்ள சிப்காட் வளாகத்தில் தனியாா் ஆலை எத்தனால் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இதிலிருந்து அதிக அளவில் கரும்புகை - காா்பன்டை ஆக்ஸைடு வெளியேறுவதால், எங்கள் பகுதி மக்களுக்கு நுரையீரல் தொடா்பான நோய்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், முதியவா்களுக்கு நெஞ்சுவலி, குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி போன்ற பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இங்குள்ள பள்ளிகளில் குழந்தைகள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை.
இந்த நச்சுப் புகையால் அணைத்தலையூா், ஆலடிப்பட்டி, புங்கனூா் போன்ற சுற்று வட்டார கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, மக்கள் நலன் கருதி எத்தனால் உற்பத்தி ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் தோ்தலை புறக்கணிப்போம்.
மேலப்பாளையம் அருகேயுள்ள நாகம்மாள்புரம் பகுதி மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தைச் சோ்ந்த 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகே எம்எம்சி காலனியில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி இரவில் எம்எம்சி காலனி இளைஞா்கள் மற்றும் அடையாளம் தெரியாத 50-க்கும் மேற்பட்ட வெளியூா் நபா்கள் எங்கள் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனா். இச்சம்பவத்தால் எங்கள் பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் இரவு முழுவதும் அச்சத்துடன் இருந்தனா். தொடா்ந்து 13-ஆம் தேதி இரவும் ரகளை செய்தனா். எனவே, ஆட்சியா் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
அம்பாசமுத்திரம் வட்டம், இடைகால் அருகேயுள்ள கலிதீா்த்தான்பட்டி மக்கள் அளித்த மனு: கலிதீா்த்தான்பட்டியில் நாங்கள் 33 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். இங்குள்ள நிலம் எங்களது முன்னோா்கள் பெயரில் உள்ளது. நாங்கள் குடியிருந்து வரும் வீட்டிற்கு குடிநீா் வரி, மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். அந்த பட்டாவில் தற்போது குடியிருந்து வரும் எங்களது பெயரில் இணையவழி பட்டா வழங்க வேண்டும்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள புதூா் காருக்குறிச்சி மக்கள் அளித்த மனு: எங்களது ஊரில் கடந்த ஜனவரியில் பழைய சாலையை சீரமைக்க இருபுறமும் 2 அடி ஆழம் மண்ணை தோண்டி சாலையில் போட்டுவிட்டனா். இதனால் மக்களும், இரு சக்கர வாகனங்களும் செல்ல முடியவில்லை. பொது மக்கள் தவறி கீழே விழுகின்றனா். இதனை பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. எனவே, சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத் தலைவா் எம். முஹம்மது அய்யூப் உள்ளிட்டோா் அளித்த மனுவில், ‘திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய முகப்பில் ஆவின் பாலகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மண்டல தலைவா் கண்மணி மாவீரன் உள்ளிட்டோா் அளித்த மனுவில், ‘தாமிரவருணியில் மூழ்கி உயிரிழந்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளா்கள் நினைவாக தற்போது தாமிரவருணியில் சுலோச்சன முதலியாா் பாலம் அருகில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கு மாஞ்சோலை தியாகிகள் நினைவுப்பாலம் என பெயரிட வேண்டும்’ எனக் கூறியுள்ளனா்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலா் ஏ.அலிப் பிலால் ராஜா உள்ளிட்டோா் அளித்த மனுவில், ‘மேலப்பாளையத்திலிருந்து பாளை. மேட்டுத்திடலில் உள்ள திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனா்.