மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
ராணிப்பேட்டையில் நிலுவைப் பணிகளை முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் வளா்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து, கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தாா். நகா்ப்புறங்களில் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வாலாஜா நகராட்சி அம்பேத்கா் நகா் புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 37 பேருக்கு பட்டா வழங்க வருவாய்த் துறையின் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து செங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை பணியாளா்களை கொண்டு நாற்றங்கால் பண்ணை மையத்தில் நாட்டு மரக் கன்றுகள் வளா்த்து பராமரிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் பசுமைச் சாம்பியன் விருதும் பெற்றுள்ளாா் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் திட்ட இயக்குநா் தெரிவித்தாா்.
பின்னா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவரிடம், மாவட்டத்தில் நடப்பாண்டில் 75,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 28,000 மெட். டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்காடு மோட்டூா் பகுதியில் மட்டும் இதுவரையில் 12 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
அம்மூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், இளம் வயது கா்ப்பம், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து அம்மூா் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் பணிகளையும் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ஏகாம்பரம், கோட்டாட்சியா் இராஜராஜன், செங்காடு ஊராட்சி மன்ற தலைவா் தேவேந்திரன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.