ராமநாதபுரம்: பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்; மாவட்டத் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; காரணமென்ன?
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருந்து வந்த கதிரவன் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டு இயற்கை விவசாய ஆர்வலரான தரணி முருகேசன் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தரணி முருகேசனைக் கொலை செய்ய முயன்ற இருவர் அவரது ஆதரவாளர்களிடம் சிக்கினர். இது தொடர்பாகக் கதிரவன் உள்ளிட்ட சிலர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவானது.
இதனிடையே கடந்த மக்களவைத் தேர்தலின் போது பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து தரணி முருகேசனும், கதிரவனும் இணைந்து பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் பா.ஜ.கவின் கிளை மற்றும் மண்டல பதவிகளுக்கு நியமனம் மற்றும் தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்ம கார்த்திக், நிர்வாகி சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் காரிய கர்த்தர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், கட்சியைப் பற்றித் தெரியாதவர்களை மண்டல தலைவர்களாக நியமித்துள்ளதாகவும் ஒரு பகுதியினர் புகார் எழுப்பினர்.
எனவே மாவட்ட தலைவர் தரணி முருகேசனை நீக்கிவிட்டு புதிய தலைவரை நியமிக்கவும், மண்டல தலைவர் பதவிக்கான தேர்தலை மீண்டும் நடத்தவும் அவர்கள் மாநிலத் தலைமைக்குக் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தியும், தரணி முருகேசன் பதவி விலகக் கோரியும் அரண்மனை முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதனால் மற்ற பா.ஜ.க தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதே போல் முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் நடந்த பா.ஜ.க உட்கட்சி நிர்வாகிகள் தேர்தலில், நிர்வாகிகள் சிலர் வாக்குச் சீட்டுகளைக் கிழித்து வீசியதால் பிரச்னை எழுந்தது. இதனால் அங்குத் தேர்தல் தொடர்பான கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. மேலும் சில பகுதிகளில் இது போன்ற பிரச்னை நிலவியதால் அங்கும் நிர்வாகிகள் தேர்வு கூட்டங்கள் அவசர அவசரமாக முடிக்கப்பட்டன. இதனால் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...