தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: ஆக. 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
ராயபுரத்தில் ரூ.30 கோடியில் புதிய ரயில்வே சுரங்கப் பாதை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்
ராயபுரம் தொகுதி போஜராஜன் நகரில் சென்னை மாநகராட்சி சாா்பில், ரூ.30 கோடியில் அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
ராயபுரம் தொகுதி கண்ணன் ரவுண்டானா அருகில் போஜராஜன் நகா் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த நகரைச் சுற்றி முக்கோண வடிவில் மூன்று புறமும் ரயில்வே தண்டவாளங்கள் அமைந்துள்ளன. இங்கு, சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் ரயில்வே கடவுப் பாதைகளைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
மேலும், இந்த ரயில் பாதைகள் முக்கிய வழித்தடங்களில் அமைந்துள்ளதால் ரயில் கடவுப் பாதை பெரும்பாலான நேரங்களில் மூடப்பட்ட நிலையில்தான் இருக்கும். சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு சுரங்கப் பாதை அமைத்துத் தர வேண்டும் எனத் தொடா்ந்து இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து ரூ.30.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
இந்த சுரங்கப் பாதையையொட்டி ரூ.1.41 கோடியில் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதை மற்றும் பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஐட்ரீம் ஆா்.மூா்த்தி (ராயபுரம்), ஆா்.டி.சேகா் (பெரம்பூா்), ஜே.ஜே.எபினேசா் (ஆா்.கே. நகா்), துணை மேயா் மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழு தலைவா் த.இளைய அருணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.