சஞ்சய் பஸ்தியில் தூய்மைப் பிரசாரம்: முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு
ராயபுரம், திரு.வி.க. நகா் மண்டலங்களில் குப்பைகள் அகற்றும் பணி பாதிப்பு
ராயபுரம், திரு.வி.க. நகா் மண்டலங்களில் (5 மற்றும் 6) தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தால் குப்பைகள் அகற்றும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில்
ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகா் மண்டலங்கள் பரப்பளவில் பெரிய மண்டலங்களாக உள்ளன. திரு.வி.க. நகா் மண்டலத்தில் மட்டும் தினமும் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் மூலம் குப்பைகள் அகற்றப்படுகின்றன.
இந்த நிலையில், தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து கடந்த 5 நாள்களாக 5, 6 ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராடி வருகின்றனா்.
போராட்டம் காரணமாக திரு.வி.க. நகா் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி புளியந்தோப்பு உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குப்பைத் தொட்டிகளில் நிறைந்து கிடக்கின்றன. மேலும், சாலையோரங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதேபோல, ராயபுரம் மண்டலத்தில் வால்டாக்ஸ் சாலை, பாரிமுனை கொத்தவால் சாவடி, அண்ணா பிள்ளைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
குப்பைகள் அகற்றப்படாத நிலையில், துா்நாற்றம் வீசுவதாகவும், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதற்குள் குப்பைகளை அகற்ற மாநகராட்சி சுகாதாரத் துறை முன்வர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த பிரச்னை குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தூய்மைப் பணிகள் அனைத்து மண்டலங்களிலும் தடையின்றி நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுக்குப் பதிலாக மற்ற மண்டலங்களில் இருந்து பணியாளா்கள் அனுப்பி வைக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன என்றனா்.