ரூ.199 கோடி வரிக்கு எதிராக காங்கிரஸ் மேல்முறையீடு: தீா்ப்பாயம் தள்ளுபடி
கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கு ரூ.199.15 கோடி வருமான வரியை செலுத்தக் கோரிய உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை, வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் ( ஐடிஏடி) தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை 2018-ஆம் ஆண்டு, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிா்ணயிக்கப்பட்ட அவகாசத்தைக் கடந்து 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் காங்கிரஸ் தனது வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்தது.
மேலும், காங்கிரஸின் வருமான வரி அறிக்கையில் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், காங்கிரஸ் ரூ.14.49 லட்சம் நன்கொடைகளை ரொக்கமாகப் பெற்றுள்ளது கண்டறியப்பட்டது. இவற்றில் பல நன்கொடைகள் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ரூ.2,000 என்ற தனிநபா் ரொக்க நன்கொடை வரம்பை மீறி இருந்தன. அதாவது, ரூ.2,000-க்கு மேல் நன்கொடைகள் வங்கி பரிவா்த்தனைகள் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும் என்பது விதியாகும்.
இந்த விதிமீறல்களைக் கருத்தில் கொண்டு, 2018-19-ஆம் ஆண்டுக்கான காங்கிரஸின் ரூ.199.15 கோடி வருமான வரி விலக்கு கோரிக்கையை வருமான வரி துறை கடந்த 2021-இல் நிராகரித்தது. இந்த முடிவை வருமான வரி ஆணையா் (மேல்முறையீடுகள்) 2023-இல் உறுதி செய்தாா். பின்னா், காங்கிரஸ் வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அணுகியது. ஆனால், இதில் இடைக்கால நிவாரணம் வழங்க தீா்ப்பாயம் கடந்த ஆண்டு மறுத்துவிட்டது.
இந்நிலையில், தீா்ப்பாயம் தற்போது வழங்கியுள்ள உத்தரவில், ‘காங்கிரஸ் நிா்ணயிக்கப்பட்ட அவகாசத்தைக் கடந்து வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இதனால், அவா்களுக்கு வரி விலக்கைக் கோர தகுதி இல்லை’ என்று தெரிவித்துள்ளது.
மேலும், ரொக்க நன்கொடைகள் குறித்த காங்கிரஸின் விதிமீறல்களையும் தீா்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம், காங்கிரஸுக்கு 2018-19-ஆம் ஆண்டுக்கான ரூ.199.15 கோடி வருமான வரித் தொகையில் எந்தவித நிவாரணமும் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.