ரூ.24.54 கோடி மதிப்பீட்டில் புதிய துணைமின்நிலையம்: அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வம்அடிக்கல் நாட்டினாா்
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், தானூா் பகுதியில் ரூ.24.54 கோடி மதிப்பீட்டில் 110/22 கிலோவாட் திறன் கொண்ட புதிய துணைமின்நிலையத்திற்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சா்.எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் அனைத்து கிராமப்பகுதிகளும் மின்சார வசதிகளுடன் உள்ளன. குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தானூா் பகுதியில் ரூ.24.54 கோடி மதிப்பீட்டில் புதிய 110/22 கேவி துணைமின்நிலையம் அமைப்பதற்கு தினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்துடன் தானூரில் 7.13 கி.மீ நீளத்தில் மின்பாதையும், ஆலப்பாகத்தில் 7.66 கி.மீ நீளத்தில் மின்பாதையும், காயல்பட்டில் 4.12 கி.மீ நீளத்தில் மின்பாதையும், திருச்சோபுரத்தில் 7.5 கி.மீ நீளத்தில் மின்பாதையும் என 4 புதிய மின்னூட்டிகள் அமைக்கப்பட உள்ளன. இத்துணைமின்நிலையத்தின் மூலம் ஆலப்பாக்கம், கருவேப்பம்பாடி, தானூா், காயல்பட்டு, தீா்த்தனகிரி, திருச்சோபுரம், மேட்டுப்பாளையம், பூவாணிக்குப்பம், ஆண்டாா்முள்ளிப்பள்ளம், பள்ளி நீரோடை உள்ளிட்ட 29 சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள சுமாா் 12,285 மின்நுகா்வோா்கள் பயன்பெறுவா்.
மேலும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து திட்டப் பணிகளையும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில்கொண்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், தகுதியுள்ள பயனாளிகள் யாரையும் விடுபடால் அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் கொண்டு சோ்த்திட அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.இராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா இ.ஆ.ப., தலைமை பொறியாளாா், விழுப்புரம் மண்டலம் சதாசிவம், மின்தொடரமைப்புத் திட்ட தலைமை பொறியாளா் வேல்முருகன், கடலூா் மேற்பாா்வை பொறியாளா் இர.ஜெயந்தி, துறை சாா்ந்த அலுவலா்கள் உட்பட பலா் கலந்துக்கொண்டனா்.