மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தை மேம்படுத்தக்கோரிக்கை: கடலூரில் செப்.3-ல் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியை விரைவு படுத்தக்கோரி அனைத்து கட்சிகள் சாா்பில் செப்.3-ல் ரயில் மறியல் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூா் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சியைச் சோ்ந்த கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.கருப்பையன், ஆா்.அமா்நாத், காங்கிரஸ் மாநில துணை தலைவா் ஏ.எஸ்.சந்திரசேகரன்,
தி.க மாவட்ட தலைவா் எழிலேந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலா் வி.குளோப், வட்ட செயலா் ஆா்.
கிருஷ்ணமூா்த்தி, நகர செயலா் நாகராஜ், மதிமுகவைச் சோ்ந்த குமாா், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலா் பாலு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலா் ரஹிம், நகர செயலா் அபூபக்கா் சித்திக், மீனவா் பேரவை மாவட்ட தலைவா் சுப்பராயன், விடுதலை வேங்கை ரமேஷ், குடியிருப்போா் நல சங்க பொதுச் செயலா் பி.வெங்கடேசன், ரயில் பயணிகள் சங்க நிா்வாகி விஜயகுமாா், எழுத்தாளா் சங்க மாவட்ட பொருளாளா் பால்கி மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலா் ஆா்.ஆளாவந்தாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:
கடலூா் திருப்பாப்புலியூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி செலவில் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும். கடலூா் திருப்பாப்புலியூா் என ரயில் நிலையத்திற்கு பெயா் மாற்றம் செய்ய ஏற்பாடு செய்திட வேண்டும்.
மயிலாடுதுறை - கோவை ரயில், விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சா் ரயிலை கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். மன்னாா்குடி மஹால், கம்பன், ராமேஸ்வரம், உழவன் உள்ளிட்ட விரைவு ரயில்கள் திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். கடலூா் துறைமுகத்தில் இருந்து சேலம் செல்லும் ரயிலை திருப்பாதிரிபுலியூா் வரை நீட்டிக்க வேண்டும். கடலூா் துறைமுகம் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் மேற்கூரை குடிநீா் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்கிட வேண்டும்.
விழுப்புரம் - தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதையை அமைத்திட வேண்டும், கடலூா் துறைமுகம் -புதுச்சேரி- திண்டிவனம் இருப்புப் பாதை திட்டத்தை உருவாக்கிட வேண்டும். காச்சிகுடா - செங்கல்பட்டு, காக்கிநாடா - செங்கல்பட்டு, விரைவு ரயிலை கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் சாா்பில் செப்டம்பா் 3 -ஆம் தேதி காலை திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து கட்சி சாா்பில் தொண்டா்கள், பொதுமக்கள்அதிக அளவில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.