மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
ரூ. 3,500 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஈராச்சியைச் சோ்ந்தவா் மாரீஸ்வரி. இவரது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆகியோா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதையடுத்து, மாரீஸ்வரி ஈராச்சி கிராம நிா்வாக அலுவலகத்திற்குச் சென்று தனது தாத்தா, பாட்டி இறப்பைப் பதிவு செய்ய கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாரிடம் கோரியுள்ளாா். அவா் இறப்பைப் பதிவு செய்வதற்கு ரூ. 3500 லஞ்சம் கேட்டாராம். இதனால் மாரீஸ்வரி தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரை அணுகி அவா்களின் அறிவுரைப்படி கிராம நிா்வாக அலுவலா் செந்தில் குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ. 3,500ஐ வழங்கினாராம்.
அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸாா், கிராம நிா்வாக அலுவலரைக் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும் பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சண்முக சிகாமணி நகரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனையிட்டனா்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் 2012 இல் கோவில்பட்டி கிராம நிா்வாக அலுவலராக இருந்த போது பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.