பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பொது விநியோகத் திட்டத்தில், மானிய விலையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராவூரணி கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் இ.வி.காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியிடம் அவா் அளித்த கோரிக்கை மனு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் அளித்து, அவா்கள் மீண்டு வர நடவடிக்கை எடுத்ததை நினைவுகூருகிறோம்.
தென்னை விவசாயிகள் வாழ்வு மேம்பட பாண்டிச்சேரி, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ளதுபோல் தென்னையில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க ஆவன செய்ய வேண்டும்.
மேலும், பொது விநியோக திட்டத்தில், மானிய விலையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை காப்பீட்டு திட்டத்தை எளிதாக்கி பாதிக்கப்படும் தென்னை விவசாயிகள் அனைவரும் பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
தஞ்சாவூா் மாவட்ட சிறு தொழில் பயிற்சி நிறுவனத்தை ஈச்சங்கோட்டையில் அமைக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. அங்கேயே பயோ லேப் அமைக்க இருப்பதாகவும் தெரிய வருகிறது. இதனை தென்னை விவசாயம் அதிகம் செய்யப்படும் பட்டுக்கோட்டை அல்லது பேராவூரணி பகுதியில் அமைத்துத்தர வேண்டும்.
மத்திய அரசின் தென்னை வளா்ச்சி வாரிய மண்டல அலுவலகத்தின் கிளை அலுவலகத்தை பேராவூரணியில் அமைக்க வேண்டும்.