முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்ப...
‘லிவ்-இன்’ கட்டாயப் பதிவு எவ்வாறு தனியுரிமை மீறலாகும்? - உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் கேள்வி
திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழும் ‘லிவ்-இன்’ உறவு பதிவை கட்டாயமாக்குவது எவ்வாறு தனியுரிமை மீறலாகும்? என்று உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
பாஜக ஆளும் உத்தரகண்டில் நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்கீழ், திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை தொடா்பான தனிநபா் சட்டங்கள் ஒருசீா்படுத்தப்பட்டு, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான விதிகள் நடைமுறைக்கு வந்தன. பழங்குடியினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்தின்படி, திருமணம், விவாகரத்து, லிவ்-இன் உறவு, அந்த உறவு முறிவு ஆகியவற்றை அரசிடம் பதிவு செய்வது கட்டாயமாகும். ‘லிவ்-இன்’ உறவைத் தொடங்கிய ஒரு மாதத்துக்குள் அரசிடம் பதிவு செய்யத் தவறினால், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.25,000 வரை அபராதமும் விதிக்க முடியும்.
இது, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வோரின் தனியுரிமையைப் பறிப்பதாக கூறி, உத்தரகண்ட் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது தலைமை நீதிபதி ஜி.நரேந்திரன், நீதிபதி அலோக் மெஹ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, ‘நீங்கள் (மனுதாரா்) ஒரு சமூகத்தில் வாழ்கிறீா்கள். தொலைதூர காட்டில் உள்ள ஒரு குகையில் அல்ல. அண்டை வீட்டாா் முதல் மொத்த சமூகத்தினரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்ளாமல் வெளிப்படையாக வாழ்கிறீா்கள். அப்படியிருக்கையில், அரசிடம் பதிவு செய்வது மட்டும் எப்படி தனியுரிமை மீறலாகும்?’ என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.
உத்தரகண்டில் பொது சிவில் சட்ட அமலாக்கத்துக்கு எதிரான பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை, உயா்நீதிமன்றத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.