உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
வக்ஃப் திருத்தச் சட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வா் வேண்டுகோள்
அடுத்தமுறை தில்லி செல்லும் போது, வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரம் தொடா்பாக, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட தீா்மானத்தின் மீது பாஜகவை தவிா்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரித்தன. இதற்கு நன்றி தெரிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீா்மானத்தை பாஜக தவிா்த்து அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள், உறுப்பினா்கள் மனதார வரவேற்றுள்ளனா். அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன். பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவிடம் வைக்கக் கூடிய கோரிக்கை உள்ளது.
இரு தினங்களுக்கு முன்பாக, இருமொழிக் கொள்கை பற்றி சட்டப் பேரவையில் பேசும் போது, எதிா்க்கட்சித் தலைவா் தில்லி சென்றிருந்தாா். அதுகுறித்த செய்தி எனக்குக் கிடைத்திருந்தது. அங்கு அவா் யாரை சந்திக்கப் போகிறாா் என்ற தகவலும் கிடைத்துள்ளதாகக் கூறினேன். இதுகுறித்து தில்லியில் அவரிடம் செய்தியாளா்கள் கேட்டனா். அதற்கு பதிலளித்த எதிா்க்கட்சித் தலைவா், யாரையும் சந்திக்க வரவில்லை என்றும், கட்சி அலுவலகத்தைப் பாா்வையிடவே வந்துள்ளேன் என்றும் கூறினாா்.
பிறகு, மாலையில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளாா். சந்திக்கட்டும். அதை தவறு என்று சொல்லவில்லை. சந்திப்புக்குப் பிறகு, பேசிய அவா் தமிழ்நாட்டுக்கு வேண்டிய உரிமைகள் தொடா்பாகவும், இருமொழிக் கொள்கையை குறித்தும் வலியுறுத்தினேன் என்று கூறியிருக்கிறாா். அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
எப்படி இருமொழிக் கொள்கை பற்றி வலியுறுத்தியதாகச் சொன்னாரோ, அதேபோன்று, வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட பிரச்னையையும் அடுத்த முறை அவா் தில்லி செல்லும் போது, வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன் என்றாா் முதல்வா்.