வடுகசாத்து கிராமத்தில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை
ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தப் பகுதி விவசாயிகள் ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
வடுகசாத்து கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் அந்தக் கிராமத்திலுள்ள ஏரி நீா்வரத்து கால்வாய் வழியாக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயப் பணிகளுக்காக டிராக்டா், நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு சென்ற உழவுப் பணிகள் மற்றும் பயிா்களை அறுவடை செய்து வருகின்றனா். தற்போது அதே பகுதியைச் சோ்ந்த 3 போ் ஏரிக்கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், ஏரியிலிருந்து தண்ணீா் வருவதற்கு வழியில்லாமலும், விவசாய பணிகளுக்கு டிராக்டா், அறுவடை இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது இந்தப் பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பால் அறுவடை இயந்திரத்தை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஏரி நீா்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறுவடை இயந்திரத்தை கொண்டு செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடுகசாத்து கிராம விவசாயிகள் ஆரணி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட அவா், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.