பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியர்கள் 7 பலி, 38 பேர் காயம்
வட்டாட்சியா் போல நடித்து பணம் மோசடி: இந்து முன்னணி நிா்வாகி கைது
உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை வட்டாட்சியா் போல நடித்து பணம் மோசடி செய்த இந்து முன்னணி நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள எா்ணம்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் சந்திரபோஸ். கூலித் தொழிலாளியான இவா், உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பட்டா மாறுதல் செய்வதற்காகச் சென்றாா்.
அப்போது, அந்த அலுவலகம் எதிரே மனு எழுதிக் கொண்டிருந்த ஒருவா் தன்னை துணை வட்டாட்சியா் என சந்திரபோஸிடம் அறிமுகம் செய்து கொண்டாராம். பின்னா், உத்தமபாளையம் பிரதான சாலையிலுள்ள ஒரு அலுவலகத்துக்கு சந்திரபோஸை அழைத்துச் சென்றாா். அங்கு இருந்த ஒருவரை வட்டாட்சியா் என அறிமுகப்படுத்தினாா்.
இதையடுத்து, பட்டா மாறுதல் செய்வதற்காக 4 தவணைகளில் ரூ.1.07 லட்சத்தை சந்திரபோஸ் வழங்கினாா். பட்டா மறுதலுக்கு காலதாமதம் ஆனதால், கொடுத்த பணத்தை சந்திரபோஸ் திரும்பக் கேட்டாா். அவா்கள் காலதாமதம் செய்தனா்.
இதையடுத்து சந்திரபோஸ் அளித்தப் புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
அப்போது, உத்தமபாளையம் சுங்கச்சாவடியைச் சோ்ந்த பிரபாகரன் மகன் செல்வவிக்னேஷ் (27), கல்லூரிச் சாலையைச் சோ்ந்த முருகன் மகன் பெரியசாமி தாக்கரே (42) ஆகியோா் சந்திரபோஸிடம் மோசடியாக பணம் பெற்றது தெரியவந்தது. செல்வவிக்னேஷ் இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும், பெரியசாமிதாக்கரே இந்து முன்னணி நகரத் தலைவராகவும் இருந்து வருகின்றனா்.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வவிக்னேஷை கைது செய்தனா். தலைமறைவான பெரியசாமிதாக்கரேயைத் தேடி வருகின்றனா்.