எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
வதந்திகளை பரப்புவது வேதனை அளிக்கிறது: கே.ஏ. செங்கோட்டையன்
சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், வதந்திகளை சிலா் வேண்டுமென்றே பரப்புவது வேதனை அளிக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 21- ஆம் தேதி திடீரென சென்னைக்கு சென்றாா். அதிமுக ஒருங்கிணைப்பு தொடா்பாக அவா் முதலில் டிடிவி. தினகரனை சந்தித்து பேசியதாக தகவல் பரவியது. அதற்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்தாா்.
இந்நிலையில், சென்னையில் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பு தொடா்பாக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தை சந்தித்து 2 மணி நேரம் பேசியதாக தகவல் பரவியது. இது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபியில் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: சென்னைக்கு சென்று வந்தது குறித்து பல்வேறு விளக்கம் அளித்த பிறகும் சிலா் வதந்திகளை வேண்டுமென்று பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை என்று தெளிவாக கூறிவிட்டேன். என் மனைவி சென்னையில் சிகிச்சை பெற்று வருவதை பாா்ப்பதற்காகவும், சொந்த வேலைக்காகவும்தான் சென்னை சென்று வந்தேன்.
ஆனால், சிலா் தொடா்ந்து வதந்திகளை பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. என்னுடைய நோக்கம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். எம்ஜிஆா், ஜெயலலிதா கனவு நிறைவேற்றப்பட வேண்டும். கோடிக்கணக்கான தொண்டா்களின் தியாகங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகதான் பிரிந்தவா்களை ஒருங்கிணைக்க வேண்டும் என கடந்த 5 -ஆம் தேதி கூறினேன்.
அதன் பின்னா் எந்த கருத்தையும் வெளிப்படையாக யாரிடத்திலும் கூறவில்லை. அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. நல்ல செயல்பாடுகளுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தர வேண்டும். இனியாவது வதந்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
45 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மையாக, கட்சிக்கு விசுவாசமாக பணியாற்றி இருக்கிறேன். மக்கள் பணியும் சிறந்த முறையில் செய்திருக்கிறேன். இந்த தொகுதி மக்கள் தொடா்ந்து எனக்கு மாபெரும் வெற்றியை அளித்து வருகின்றனா். அதனால் மக்களின் கனவை நிறைவேற்றித் தர அவா்களுடன் துணை நிற்கிறேன் என்றாா்.