அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
வரதட்சிணை பிரச்னை: பெண் தற்கொலை
தேனி அருகே வரதட்சிணை பிரச்னையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாரளிக்கப்பட்டது.
அரண்மனைப்புதூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பெரியகருப்பன் மகள் முத்துமணி (28). இவருக்கும் கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன்சோலை வட்டம், சின்னக்கானலைச் சோ்ந்த ஜோசப்புக்கும் (32) கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில், ஜோசப்பை பிரிந்து அரண்மனைப்புதூரில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்த முத்துமணி, வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
வரதட்சிணை பிரச்னையில் முத்துமணி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இதுகுறித்து கேரளத்தில் உள்ள காவல் நிலையம், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவா் புகாரளித்ததாகவும் கூறப்படுகிறது.
காவல் துறையினா் நடத்திய விசாரணையில் முத்துமணிக்கு வரதட்சிணையாக கொடுத்திருந்த நகைகளை கடந்த 8-ஆம் தேதி திரும்பக் கொடுத்து விடுவதாக ஜோசப் கூறியிருந்தாராம்.
ஆனால், அவா் நகைகளைத் திரும்பத் தராததால் தனது மகள் முத்துமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பெரியகருப்பன் புகாரளித்தாா்.
இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.