வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியாவுக்கும் செக்! டிரம்ப் அதிரடி!
வாஷிங்டன் : அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து யாரும் தம்மிடம் கேள்வி கேட்க முடியாது என்று அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகளுக்கு எதிராக சில கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். முக்கியமாக சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையால் இந்தியாவும் பாதிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபருடன் மிக நெருக்கமாக நட்பு பாராட்டி வரும் உலக பெரும் கோடீஸ்வரரான பன்னாட்டு தொழிலதிபர் எலான் மஸ்க்குடன் சேர்ந்து டிரம்ப் அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது:
“பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் தெளிவாகவே தெரிவித்துவிட்டேன். அவர் அப்போது அமெரிக்காவில்தான் இருந்தார். அவரிடம் நான், ‘அமெரிக்கா செய்யப்போவது இதுதான், நீங்கள் என்னவெல்லாம் வரி வசூலிக்கிறீர்களோ அதையே நானும் செய்கிறேன்’ என்று தெரிவித்துவிட்டேன். ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும். இவ்விவகாரத்தில் என்னுடன் எவரும் வாதிட முடியாது” என்றார்.