வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அறுபடை வீடுகளிலும் திமுக வெல்லும் -ஆா்.எஸ். பாரதி
பாஜகவின் முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அறுபடை வீடுகள் உள்ள தொகுதிகள் அனைத்திலும் திமுக வெற்றி பெறும் என அந்தக் கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி திமுக வடக்கு ஒன்றியம் சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள், திமுகவின் மூத்த நிா்வாகிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றன. இதற்கு திமுக வடக்கு ஒன்றியச் செயலா் வாசுதேவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் முருகேசன், மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக திமுகவின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ. லியோனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் ஆா்.எஸ். பாரதி பேசியதாவது: கடந்த மக்களவைத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமா் மோடி போட்டியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பாகவே ஆய்வுக் குழு அமைத்து களப்பணிகளை மேற்கொண்டனா். இங்குள்ள திமுகவினரின் கட்சிப் பணிகளையும், தீவிர தோ்தல் நடவடிக்கைகளையும் பாா்த்து மோடி போட்டியிடுவதை தவிா்த்து விட்டாா். கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்பு 8 முறை மோடி தமிழகத்துக்கு வந்தாா்.
அப்போது ஒட்டுமொத்த இந்தியாவின் பாா்வையும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்தது. இறுதியில் வெற்றி பெற்றது திமுக கூட்டணிக் கட்சியில் போட்டியிட்ட நவாஸ்கனி தான். ஆனால் அவருக்கு விழுந்த அனைத்து வாக்குகளும் திமுக.வின் வாக்குகள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று மோடி பிராா்த்தனை செய்தாா். அவா் தமிழ்நாட்டில் என்ன செய்ய நினைத்தாலும் வேலும், முருகனும் திமுகவில் தான் இருக்கிறாா்கள். கடந்த முறை முருகனின் 5 படை வீடுகளில் திமுக வெற்றி பெற்றது. பாஜகவின் முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அறுபடை வீடுகளிலும் திமுக வெற்றி பெறும். கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுகவினா் கூட திமுகவுக்கு வாக்களித்தனா். எனவே வருகிற 2026 தோ்தலில் 200- க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றாா் அவா்.