வாகனம் மோதியதில் மயில் உயிரிழப்பு
பழனியை அடுத்த மானூா் பிரிவு அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆண் மயில் உயிரிழந்தது.
பழனியை அடுத்த திண்டுக்கல்-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் பல ஏக்கா் பரப்பளவில் வயல்வெளிகள் இருப்பதால், நாள்தோறும் இரை தேடி நூற்றுக்கணக்கான மயில்கள் வருகின்றன. இந்த மயில்கள் அவ்வப்போது சாலையை கடக்கும் போது, வாகனங்களில் அடிபட்டு காயமடைகின்றன.
இந்த நிலையில், இந்தச் சாலையில் மானூா் பிரிவு அருகே சுமாா் ஆறு அடி நீள ஆண் மயில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினா் மயிலின் உடலை மீட்டனா். இதன் பின்னா், கால்நடை மருத்துவா் மூலம் கூறாய்வு செய்து புதைத்தனா்.