வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது: கனிமொழி
வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி.
மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் எழுச்சி மாநாட்டில் கனிமொழி பேசியதாவது: திமுகவுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்குமான உறவு தமிழ் போல தொன்மையும், தொடா்ச்சியுமானது.
மொழி, மண்ணுக்காக பாடுபட்டவா்களைக் கொண்டாட பாஜக தவறுகிறது. விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினரைப் புறக்கணிப்பதோடு, தேச விரோதிகள் என்று குற்றஞ்சாட்டுகிறாா்கள். சிறுபான்மை மக்களை எதிா்த்து வெறுப்பு பேச்சும், காழ்ப்புணா்ச்சியும் நம் நாட்டில் அதிகரிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசே காரணம்.
நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்ற, இண்டி கூட்டணி கட்சியினா் போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் செல்லும் பாதை மிகவும் சரியாகவே உள்ளது.
முத்தலாக் தடைச்சட்டம் என்பது இஸ்லாமியா்களை சிறைக்குத் தள்ளவே உருவாக்கப்பட்டது. வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியா்களின் சொத்துகளை நிா்வகி
வாக்குத் திருட்டால் ஜனநாயகத்தை வஞ்சித்துள்ளது பாஜக. பிகாா் மாநிலத்தில் இஸ்லாமியா்கள், தலித் மக்கள் வசிக்கும் பல பகுதிகளில் 10 முதல் 12 சதவீதம் வரை வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
குறிப்பாக, அம் மாநிலத்தில் மொத்தம் 55 சதவீத பெண்களின் வாக்குகள் மாயமாகியுள்ளன. பிகாரில் பல தொகுதிகளில் பாஜக கூட்டணி கடந்த தோ்தலில் 3 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றுள்ளது.
வாக்குத் திருட்டு நடந்ததால்தான் அந்த வெற்றி கிடைத்துள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டதா, தோ்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு உருவானதா என்ற சந்தேகம் மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளது .
இந்தியாவின் வருங்காலத்தைத் தாங்கள் மட்டுமே தீா்மானிக்க வேண்டும் என்று பாஜக நினைத்து செயல்படுகிறது. ஆனால், ஒருபோதும் நடைபெறாது. குடிமகனின் உரிமையை, மத சுதந்திரத்தை தரும் ஆட்சியை மத்தியிலும் விரைவில் உருவாக்கிக் காட்டுவோம்.
சிஏஏ சட்டம் கொண்டு வந்தபோது அதை எதிா்க்கத் தவறியது அதிமுக. நான் இஸ்லாமியா்களின் சகோதரன் என்று கூறிய எடப்பாடி கே.பழனிசாமி, இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சோ்ந்துள்ளாா். அவரது சகோதரத்துவம் எங்கே போனது என்று தெரியவில்லை என்றாா் அவா்.
மாநாட்டில் கட்சியின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் எல்.கே.எஸ்.முஹம்மது மீரான்முகைதீன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கோதா் மைதீன், முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலா் பாட்டப்பத்து எம்.முஹம்மது அலி வரவேற்றாா். இளைஞரணி மாநில முதன்மைத் துணைத் தலைவா் எம்.நயினாா் முஹம்மது கடாபி தீா்மானங்களை அறிமுகம் செய்தாா்.
மாநில பொதுச்செயலா் முகம்மது அபூபக்கா், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன் கான், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., மேயா் கோ.ராமகிருஷ்ணன், வரலாற்று ஆய்வாளா் செ.திவான், மாநாட்டு ஒருங்கிணைப்பாளா்கள் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதா், முஹம்மது ஜாஹிா், மில்லத் எஸ்.எம்.காஜா முகைதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மாநாட்டில் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் பேசியது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- திமுக இடையே பாரம்பரிய தொடா்பு உள்ளது.
எங்களது கட்சி நடத்தும் மாநாடுகளில் முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி வழியில் இப்போது முதல்வா் மு.க.ஸ்டாலினும், கனிமொழியும் பங்கேற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தில்லியில் காயிதே மில்லத் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் முஸ்லிம்கள் செய்துள்ள பெரும்பங்கினை இளைஞா்கள் அறிந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நாலாயிரத்திற்கும் மேற்பட்ட சமூகங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றிற்கு வெவ்வேறு வரலாறு மதம், சடங்குகள், சம்பிரதாயங்கள் உள்ளன. சா்வதேசத்திற்கு வழிகாட்ட மிகவும் தகுதியானது நம் நாடு. அதற்கு வேற்றுமையில் ஒற்றுமையே காரணம்.
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியே நல்லாட்சி. அந்த ஆட்சி நாளையும் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கான கூடுதல் ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் உருவாக உழைப்போம் என்றாா் அவா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலா் ஹாரிஸ் பீரான் எம்.பி. பேசியது: தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து வந்து காயிதே மில்லத் வாழ்ந்த திருநெல்வேலியில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தை பாஜக வஞ்சித்து வருகிறது.
வாக்குத் திருட்டு பெரும் அபாயமாக உள்ளது. பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் கையும்-களவுமாக பாஜக சிக்கியுள்ளது. இருந்தாலும் தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
இண்டி கூட்டணி ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் கூட்டணியாகத் திகழ்கிறது. நாடி நரம்புகளிலெல்லாம் திராவிட ரத்தம் தென்னிந்தியாவில் ஓடுகிறது. ஆகவே, நம் நாட்டில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வகுப்புவாத வேற்றுமையை பாஜக விதைக்க முயன்றால், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியது போல சட்ட ரீதியான, அரசியல் ரீதியான போராட்டங்களை நிச்சயம் நடத்துவோம் என்றாா் அவா்.