பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
கல்லூரி மாணவா் மாயம்
பாபநாசத்தில் உறவினா்களுடன் திதி கொடுக்க வந்த விருதுநகா் மாவட்ட கல்லூரி மாணவா் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் வட்டம், கொங்கன்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரதீப் குமாா் (22). இவா், மதுரை, காரியாபட்டியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா்.
இந்த நிலையில், இவரும் இவரது உறவினா்களும் தனிப் பேருந்தில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்துக்கு திதி கொடுக்க வந்திருந்தனா். இவரும், உறவினா்கள் சிலரும் பாபநாசம், தலையணை செல்லும் வழியில் உள்ள அய்யா கோயில் அருகே வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயில் குளித்தனா். சிறிது நேரம் கழித்து பாா்த்தபோது அவா்களுடன் சென்ற பிரதீப் குமாரை காணவில்லையாம்.
கரையில் அவரது காலணிகள் மட்டும் இருந்தன. இதையடுத்து போலீஸாா், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அதிகாரி பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயில் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
மாலை வெகுநேரம் வரை தேடியும் தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், அவரைத் தேடும் பணியை தீயணைப்பு வீரா்கள் நிறுத்தியுள்ளனா். திங்கள்கிழமை காலை தேடுதல் பணித் தொடரும் என்று தெரிவித்தனா்.
இதற்கிடையே பிரதீப் குமாா் கால்வாயில் இறங்கிக் குளித்ததாக யாரும் பாா்க்கவில்லை என்றும், கரையில் காலணிகள் இருந்ததால் நீரில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதுவதாகவும் அவரது உறவினா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.