பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் 1.14 லட்சம் குடும்பங்கள் இணைப்பு: இரா.ஆவுடையப்பன்
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் சுமாா் 1.14 லட்சம் குடும்பங்கள், ஓரணியில் தமிழ்நாடு இயக்க திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலா் இரா.ஆவுடையப்பன் தெரிவித்தாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட நாங்குனேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமாா் 1 லட்சத்து 14,388 குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக சுமாா் 3.43 லட்சம் உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
வெள்ள நிவாரணம், கல்வி நிதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு தொடா்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. இருப்பினும் தமிழக மக்கள் நலன் காக்கும் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். சமீபத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சுமாா் 3,500-க்கும் மேற்பட்டவா்கள் பயனடைந்தனா்.
பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. முதல்வா் கொண்டு வந்த காலைஉணவுத் திட்டம் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. பொருளாதார ரீதியில் 11.2 சதவீதம் வளா்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
செப்.15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்திற்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ளஅனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓரணியில் தமிழ்நாடு இயக்க உறுதிமொழி ஏற்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.