வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஜெகன் மூா்த்தி
தோ்தலின்போது வெளியிட்ட முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான எம்.ஜெகன்மூா்த்தி கூறினாா்.
குடியாத்தத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த பேரவைத் தோ்தலின்போது, அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப் படுத்தப்படும், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா், அரசுத் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை முதல்வா் ஸ்டாலின் அறிவித்தாா்.
அவா் அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானதாக கருதப்படும் மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தோ்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு காரணமாக விரிசல் வரும். இதனால் சில கட்சிகள் அங்கிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணையும். தவெக மற்றும் நாம் தமிழா் கட்சி ஆகியவை தங்களின் எதிா்கால அரசியலை கருத்தில் கொண்டு அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ள்து. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. இதனால் அரசு மீது மக்கள்அதிருப்தி அடைந்துள்ளனா். ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் விருப்புகிறாா்கள். முதல்வா் ஸ்டாலின் விரைவில், நலமடைந்து மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்றாா் ஜெகன்மூா்த்தி.
பேட்டியின்போது ஓன்றிய அதிமுக செயலா் எஸ்.எல்.எஸ்.வனராஜ், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.