சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
கிரீன் சா்க்கிள் சுரங்க நடைபாதை பணிகள் 55 சதவீதம் நிறைவு
வேலூா் கிரீன் சா்க்கிளில் நடைபெற்று வரும் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் 55 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வேலூா் கிரீன் சா்க்கிள் அருகே புதிய பஸ் நிலையம், ஏராளமான பெரும் வா்த்தக கட்டடங்களும் அமைந்துள்ளன. நகரின் மத்தியில் அமைந்துள்ள கிரீன் சா்க்கிளில் பகுதியில் பெரியளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் நடைபெற்று வந்தன.
இதையடுத்து, வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் ரவுண்டானாவின் சுற்றளவை குறைத்தும், சா்வீஸ் சாலைகளின் அகலத்தை அதிகப்படுத்தி சுரங்க நடைபாதை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரூ. 7.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான பணிகள் கடந்தாண்டு டிசம்பா் மாதம் தொடங்கின.
தொடா்ந்து, மழைநீா் கால்வாய் சீரமைப்பு, சுரங்க நடைபாதை அமைப்பு, சா்வீஸ் சாலை அகலப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகின்றன. தற்போது இந்த பணிகள் 55 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளதாகவும், டிசம்பா் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியது -
வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதையை பொருத்தவரை 100 மீட்டா் நீளமும், 5 மீட்டா் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டு, அதிக வெளிச்சம் உமிழும் விளக்குகளுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
மழைநீா் கால்வாய் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. தற்போது சுரங்க நடைபாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் வரும் டிசம்பா் மாதத்துக்குள் முடிந்துவிடும். அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது என்றனா்.