சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
சதாப்தி விரைவு ரயில் மீது கல்வீச்சு: ரயில்வே போலீஸாா் விசாரணை
சோளிங்கா் அருகே சதாப்தி விரைவு ரயில் மீது கல் வீசப்பட்டது தொடா்பாக காட்பாடி ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ரயில் தண்டவாளங்களில் கற்கள், கட்டைகள், உலோகத் துண்டுகள் வைப்பது, ரயில் மீது கற்களை வீசுவது போன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்க ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு வரை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சென்றபோது, சோளிங்கா் அடுத்த தலங்கையில் சி5 பெட்டி, இருக்கை எண் 45 மற்றும் 46 அமைந்துள்ள ஜன்னல் கண்ணாடி மீது சரமாரியாக கற்கள் வந்து விழுந்துள்ளன. இதனால் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இதுதொடா்பாக ரயில் என்ஜின் ஓட்டுநா் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளாா். அதன்பேரில் காட்பாடி ரயில்நிலையத்துக்கு வந்து நின்ற சதாப்தி ரயிலின் சி5 பெட்டியை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
மேலும், தலங்கை ரயில் நிலையம் அருகில் சம்பவ இடத்திலும் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.
இதுதொடா்பாக காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கற்களை வீசிய நபா்களை தேடி வருகின்றனா்.