அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் தாய் - சேய் வாா்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் சிவசௌந்திரவல்லி புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் புதன்கிழமை காலை வாணியம்பாடி அடுத்த வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் சிவசௌந்திரவல்லி பிற்பகல் 12 மணியளவில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து பிரசவ வாா்டு(மகப்பேறு) மற்றும் தாய் - சேய் நல வாா்டுகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கா்ப்பிணிகளிடமும், குழந்தை பெற்ற பெண்களிடம் சிகிச்சைகள், அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகள் கிடைக்கப் பெற்ா என்று கேட்டறிந்தாா்.
மேலும் மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனட்சி, மருத்துவ அலுவலா் சிவசுப்பிரமணியம், மருத்துவா்கள் செந்தில், தமிழ்செல்வி ஆகியோரிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், இளைஞா்கள் சிலா் மாவட்ட ஆட்சியரிம் அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானோரை கிருஷ்ணகிரி, வேலூா் அரசு மருத்துவமனை அல்லது தனியாா் மருத்துவமனை அனுப்பி வைக்கப்படுகின்றனா். குறிப்பாக, விபத்தில் சிக்கி எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானோரை அரசு மருத்துவமனையில் ஆா்த்தோ (எலும்பு சிகிச்சை) மருத்துவா்கள் இருந்தும் தனியாா் மருத்துவமனைக்கு அல்லது வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா் என்று புகாா் தெரிவித்தனா்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உடனடியாக ஸ்கேன் நிறுவப்பட்டால் அறுவை சிகிச்சை எளிதில் செய்யலாம். இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனா். கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.