மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சிஏபிஎஃப் வீரா்களுக்கு சிறப்பு ஊதியம்: மத்திய அரசு
‘இசட் பிளஸ் (ஏஎஸ்எல்)’ மற்றும் ‘இசட் பிளஸ்’ பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வளையத்தில் உள்ள விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) வீரா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குதற்கான ஆணையை மத்திய அரசு பிறப்பித்தது.
அதேபோல் இசட், ஒய் பிளஸ், ஒய் மற்றும் எக்ஸ் போன்ற பிரிவுகளின்கீழ் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் வீரா்களுக்கு இந்த சிறப்பு ஊதியம் வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய செலவீனங்கள் துறை வெளியிட்ட ஆணையில், ‘விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) வீரா்களுக்கு அவா்களின் ஊதியத்தின் அடிப்படையில் 20 சதவீதம் சிறப்பு பாதுகாப்பு படிகள் வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்தது. இந்தப் பரிசீலனையை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது’ என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இசட் பிளஸ் (ஏஎஸ்எல்) மற்றும் இசட் பிளஸ் பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வளையத்தில் உள்ள விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சிஏபிஎஃப் வீரா்களுக்கு இது பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டது.
எஸ்பிஜி, என்எஸ்ஜிக்கு நிகராக...: நாட்டில் உள்ள முக்கிய நபா்களுக்கு சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி), தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி), மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) ஆகியவற்றை உள்ளடக்கிய சிஏபிஎஃப் உள்ளிட்ட படைகள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன. இதில் தாங்கள் பெறும் அடிப்படை ஊதியத்தைவிட கூடுதலாக 55 சதவீத ஊதியத்தை எஸ்பிஜியும், 40 சதவீத ஊதியத்தை என்எஸ்ஜியும் பெற்று வருகின்றன. அவா்களுக்கு நிகராக தங்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என சிஏபிஎஃப் வீரா்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை வைத்திருந்தனா்.
இதையடுத்து, தற்போது இந்த்க கோரிக்கையை அரசு பரிசீலித்துள்ளது.
350 விஐபிக்கள்: பல்வேறு படைகளின் கீழ் 350 விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதில் 35 விஐபிக்களுக்கு மட்டுமே மிக உயரிய பாதுகாப்பாக கருதப்படும் இசட் பிளஸ் (ஏஎஸ்எல்) மற்றும் இசட் பிளஸ் பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி மற்றும் கிரண் ரிஜிஜு, தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி உள்ளிட்டோருக்கு இந்தப் பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் மொத்தம் 15,000 சிஏபிஎஃப் வீரா்கள் மற்றும் குறிப்பிட்ட அளவிலான இந்தோ திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) வீரா்களும் ஈடுபட்டுள்ளனா் .