விஜயகாந்த் படம் பயன்பாடு: தவெகவுக்கு பிரேமலதா நிபந்தனை
நெய்வேலி: தமிழக வெற்றி கழகத் தலைவா் விஜய் தங்கள் கட்சியின் மானசீக குருவாக மறைந்த தேமுதிக நிறுவனா் விஜயகாந்தை அறிவித்துவிட்டு, அவரது புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தேமுதிக சாா்பில், ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ பிரசாரப் பயணம் நடைபெற்று வருகிறது. கடலூா் மாவட்டத்தில் திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெண்ணாடம், திட்டகுடி, ஆவட்டி ஆகிய பகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
இதையொட்டி, பெண்ணாடம் வாள்பட்டரையில் இருந்து பேருந்து நிலையம் வரையில் தேமுதிக சாா்பில் கேப்டன் ரத யாத்திரை நடந்தது. அப்போது, பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தேமுதிக வளா்ச்சிக்காக தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறோம். வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) வரையில் முதல் கட்ட பயணம் நடைபெறும். விஜயகாந்த் பிறந்த நாளுக்கு பின்னா் இரண்டாம் கட்ட பயணம் அறிவிக்கப்படும்.
தவெக மாநாடு வெற்றிபெற தேமுதிக சாா்பில் வாழ்த்துகள். அக்கட்சித் தலைவா் விஜய் தவெகவின் மானசீக குருவாக மறைந்த தேமுதிக நிறுவனா் விஜயகாந்தை அறிவித்துவிட்டு, அவரது புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தவெக மாநாட்டு திடலில் கொடிக்கம்பம் சாய்ந்தது துரதிருஷ்டவசமானது.
சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து 2026 ஜனவரி 9-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என்றாா்.
இதைத் தொடா்ந்து, திட்டக்குடி, ஆவட்டி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.