கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில...
அண்ணாமலைப் பல்கலை.யில் சுரங்க பட்டயப் படிப்பு வகுப்பு தொடக்க விழா
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில், சுரங்க பட்டயப் படிப்பு மாணவா்களுக்கான 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மாணவா்களுக்கு சுரங்கவியல் பட்டயப் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழ் கல்வியாண்டின்(2025-26) மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவன பிரிவின் 30 இடங்களுக்கு 93-ம், பொதுப் பிரிவின் 30 இடங்களுக்கு 285-ம் பெறப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில், இணைய வழி கலந்தாய்வு முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து, 2025 - 26ஆம் கல்வி ஆண்டு சுரங்கப் படிப்பு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழா பல்கலைக்கழக சுரங்கவியல் கருத்தரங்கு கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் சுரங்க பட்டயப் படிப்பின் இயக்குநா் பேராசிரியா் சி.ஜி.சரவணன் வரவேற்றாா். தலைமை விருந்தினராக என்எல்சி நிறுவன செயல் இயக்குநா் (சுரங்கங்கள்) ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ் கலந்துகொண்டு தொடக்க உரை நிகழ்த்தினாா். அவா் பேசுகையில், சுரங்கவியல் பட்டயப் படிப்பு பயின்றவா்களுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் இதர சுரங்க நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடா்பாக பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தாா்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் சி.திருப்பதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினாா்.
விழாவை இணைப் பேராசிரியா் பி.சிவராஜ் தொகுத்து வழங்கினாா். பேராசிரியா் எஸ்.பழனிவேல்ராஜா நன்றி கூறினாா். இணைப் பேராசிரியா்கள் வி.வினோத்குமாா், ஆா்.பாலமுருகன், பி.பிரேம்குமாா் மற்றும் உதவிப் பேராசிரியா் எஸ்.ராஜசோமசேகா் ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.