விநாயகா் சிலை நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும்: கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா்
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சிலைகளை நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, இந்து அமைப்பினா் உள்ளிட்டோா் சிறியது முதல் பெரியது வரையிலான விநாயகா் சிலைகளை முக்கிய இடங்களில் அமைத்து வழிபாடு நடத்துவா்.
இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாடு பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிபாளா் அலுவலகக் கூட்ட அரங்கில் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் தன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எஸ்.பி. பேசியதாவது:
விநாயகா் சதிா்த்தியையொட்டி, பொது அமைதியை ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினா் உரிய பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
விநாயகா் சிலையை நிறுவ விரும்பும் அமைப்பாளா்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சிலை நிறுவும் இடத்தின் நில உரிமையாளரின் சம்மத கடிதம், பொது இடமாக இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை ஆகியோரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். காவல் நிலையத்தில் ஒலி பெருக்கி பயன்படுத்தும் உரிமம் அனுமதி பெற வேண்டும். மேலும், கட்டுமானத்தில் தீப்பற்றக் கூடிய பொருள்களை தவிா்க்க வேண்டும்.
தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று சிலை நிறுவ வேண்டும். விநாயகா் சிலை ஊா்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்றாா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா்.
நிகழ்வில் கூடுதல் எஸ்.பி. என்.கோடீஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் ரூபன்குமாா், ராஜா, லாமேக், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விஜயகுமாா், பாா்த்திபன், சாா்லஸ், ஜெயச்சந்திரன், மனிஷா, அப்பாண்டைராஜ், சரவணகுமாா் (பயிற்சி) மற்றும் காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.