மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
முன்னாள் படை வீரா்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு
நெய்வேலி: கடலூா் முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் சட்ட உதவி மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகங்களில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரது குடும்பங்களை சாா்ந்தவா்களுக்கு தேவைப்படும் சட்ட உதவிகளை செய்து கொடுப்பதற்கு, அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் இயங்கி வரும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சட்ட உதவி மையங்களை திறந்து உதவி புரிய வேண்டும் என்று தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி, கடலூா் முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் சட்ட உதவி மையத்தை திறந்து வைத்தாா்.
விழாவில் கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான (பொ) ராஜேஷ் கண்ணன், வழக்குரைஞா்கள் சிவசிதம்பரம், காமராஜ் மற்றும் முன்னாள் படை வீரா்கள் நல அலுவலகத்தின் உதவி இயக்குநா் லெப். கா்ணல் அருள்மொழி (ஓய்வு), முன்னாள் படை வீரா் நலச்சங்க அலுவலா்கள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
சட்ட உதவி மையத்தில் முன்னாள் படை வீரா்களுக்கும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கும் சட்டம் சாா்ந்த பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், அதுகுறித்து இந்த சட்ட உதவி மையத்தில் மனுவாக கொடுத்து நிவாரணம் பெறலாம். சட்ட உதவி மையத்தில் வாரந்தோறும் புதன்கிழமை கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவால் நியமிக்கப்படும் வழக்குரைஞா் மூலம் சட்ட தன்னாா்வலா் பணியமா்த்தப்படுவாா். அவா்களிடம் மனுக்களை கொடுத்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நிவாரணம் பெற்றுத்தரப்படும் என்று தெரிவித்தனா்.