விடியோ ஒளிப்பதிவு, வடிவமைப்பு பயிற்சி பெற எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு அழைப்பு!
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்புப் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தற்போது ஆதிதிராவிடா் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப் பயிற்சி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களாகவும், 18 முதல் 30 வயது வரை உள்ளவா்களாகவும் இருக்க வேண்டும்.
தொடா்ந்து 3 மாதங்களுக்கு அளிக்கப்படும் இப் பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்குப் பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும்.
இப் பயிற்சி பெற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது, தங்கும் விடுதி மற்றும் உணவு உள்ளிட்ட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 04328 - 276317 எனும் தொலைபேசி எண்ணில் அல்லது பெரம்பலூா் மாவட்ட தாட்கோ மேலாளா் அலுவலகத்தை நேரில் அணுகி விவரம் பெற்று, உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.