விடுபட்ட பகுதிகளில் விரைவில் புதை சாக்கடை பணிகள் -நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன்
திருவள்ளூா் நகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் விடுபட்ட பகுதிகளில் விரைவில் புதைச் சாக்கடைகள் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகராட்சி கூட்டரங்கத்தில் வாா்டு உறுப்பினா்கள் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) தட்சணாமூா்த்தி, நகா்மன்றத் துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், நகா்மன்ற உறுப்பினா்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.
அப்போது, நகராட்சியில் விடுபட்ட பகுதியில் சாலையில் குண்டும் குழியுமாக உள்ளன. அதனால், விரைவில் சாலைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். நகராட்சியில் நாய்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது. இதனால், வெளியில் சென்று குழந்தைகள் விளையாடவோ, பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளிக்குச் செல்லவோ பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. உடனை, நாய்களைப் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
நகராட்சியில் உள்ள 27-வாா்டுகளில் விரிவாக்கப் பகுதிகளில் செயல்படுத்தாத புதைச் சாக்கடை பணிக்கு டெபாசிட்டும், கொடுக்காத இடங்களில் குடிநீா் வரியும் செலுத்தக் கோருகின்றனா். அதிலும், ஒவ்வொரு பகுதிகளிலும் வீட்டு வரி செலுத்தவும் கடுமையாக நடந்து கொள்கின்றனா்.
இதனால், புதைச் சாக்கடை மற்றும் குடிநீா் இணைப்பு பணிகள் மேற்கொண்ட பின்னரே வரி செலுத்த கோர வேண்டும். அதேபோல், ஏற்கெனவே புதைச் சாக்கடை இணைப்புக்கு டெபாசிட் கட்டணம் செலுத்திய நிலையிலும், ரசீது காண்பிக்க கோரி இல்லையென்றால், திரும்பவும் செலுத்தவும் வலியுறுத்துகின்றனா் என வாா்டு உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் பேசியதாவது:
நகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் விடுபட்ட பகுதிகளில் புதைச் சாக்கடை இணைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான சா்வே பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவதற்கு 2 மாதங்கள் ஆகும். இதைத் தொடா்ந்து இணைப்புகள் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல், சாலைப் பணிகள் ஒவ்வொரு வாா்டிலும் நடைபெற்று வருகிறது. விரைவில் விடுபட்ட வாா்டுகளில் பணிகள் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். நாய்களைப் பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். வீட்டு வரி செலுத்தக் கோருவது தொடா்பாக அலுவலா்கள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என்றாா்.
கூட்டத்தில் நகராட்சி உதவி பொறியாளா் சரவணன், சுகாதார அலுவலா் மோகன், வாா்டு உறுப்பினா்கள் தாமஸ், அருணா ஜெயகிருஷ்ணா, சுமித்ரா வெங்கடேசன், ஜான், அயூப் அலி, சாந்தி கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.