மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!
விமானப் போக்குவரத்துத்து பரிந்துரைக்கப்பட்ட சுற்றுலா நகரங்களில் மதுரையைச் சோ்க்க கோரிக்கை
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான தாராள விமானப் போக்குவரத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட சுற்றுலா நகரங்கள் பட்டியலில் மதுரையைச் சோ்க்க வேண்டும் என அனைத்து தொழில் வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எஸ்.ரெத்தினவேலு, பிரதமருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் ஆகியவற்றுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தா்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனா். இதேபோல, தனுஷ்கோடி, கன்னியாகுமரி, குற்றாலம், கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுடனும், மேலும் பல புனிதத் தலங்களுடன் இணைப்புக் கொண்டதாக மதுரை உள்ளது.
இந்த நிலையில், 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தாராள விமானப் போக்குவரத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய சுற்றுலா நகரங்கள் பட்டியலில் மதுரை இடம் பெறாதது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தப் பட்டியலில் மதுரை இணைக்கப்பட்டால், தென் தமிழகத்தின் தொழில், வணிகம், ஏற்றுமதி, சுற்றுலா, மருத்துவம் போன்ற பல துறைகள் மேம்பாடு அடையும், வேலைவாய்ப்புகள் பெருகும்.
எனவே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையேயான தாராள விமானப் போக்குவரத்துக்குரிய இந்திய சுற்றுலா நகரங்கள் பட்டியலில் மதுரையை இணைக்கப் பரிந்துரைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.